தொழிலாளர் நல வாரியத்தில், ஆதார் எண் இணைக்காதவர்களின் பதிவு ரத்து - அதிகாரிகள் தகவல்
தொழிலாளர் நல வாரியத்தில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பதிவு ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இதுபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டிடம் மற்றும் விசைத்தறி, தையல், கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும் தொழில் செய்கிறவர்கள், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் நிறுவனங்களில் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவ்வாறு பல்வேறு தொழிலாளர்கள் பல தொழில்களை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 17 நல வாரியங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை திருப்பூர் மாவட்ட தொழிலாளர்கள் பெறும் வகையில் திருப்பூரில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஆதார் எண் நடைமுறைக்கு வந்த பின் அனைத்து சலுகைகள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதன்படி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்கிறவர்களும், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். அவ்வாறு இணைக்காத பட்சத்தில் அவர்களின் பதிவு ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தொழிலாளர் நல வாரியத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். அதன்படி கட்டுமான வாரியத்தில் 38 ஆயிரத்து 254, அமைப்புசாரா வாரியத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 714, அமைப்புசாரா ஓட்டுனர் வாரியத்தில் 4 ஆயிரத்து 54 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 22 பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்ட பிறகு இதனை தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த ஒரு ஆண்டாக அறிவுறுத்தி வருகிறோம்.
ஆனால் பலருக்கும் இது தொடர்பான தகவல்கள் தெரிய வில்லை. இதன் காரணமாக அந்த தொழிலாளர்களும் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்து வருகிறார்கள். இவ்வாறு இணைக்காத தொழிலாளர்களின் பதிவு ரத்து செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்யப்பட்டால் அவர்களால் எந்த சலுகைகளும் பெற முடியாது.
ஆதார் எண் இணைக்காத தொழிலாளர்களுக்கு வருகிற காலங்களில் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்படும். சிலர் பதிவு செய்து விட்டு வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து சென்று விடுவார்கள். சிலர் இறந்து விடுவார்கள். இருப்பினும் அவர்களது வங்கி கணக்கிற்கு உதவித்தொகை சென்று கொண்டிருக்கும்.
இந்த முறைகேடுகளை தவிர்க்கவே ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில், தங்களது பதிவினை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்காதவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்காது.
எனவே தொழிற்சங்கத்தினர் தொழிலாளர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து, பதிவு செய்யாதவர்களை பதிவு செய்யவும் அறிவுறுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் அவர்களுக்கு கிடைத்து பயன்பெற, தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆதார் எண்ணை இணைக்காத தொழிலாளர்கள் விரைவாக இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story