வெடிகுண்டு வீசி புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளர் கொலை: பண்ருட்டி கோர்ட்டில் வாலிபர் சரண்


வெடிகுண்டு வீசி புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளர் கொலை: பண்ருட்டி கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 12 Feb 2020 4:00 AM IST (Updated: 12 Feb 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு வீசி புதுச்சேரி அமைச்சரின் ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பண்ருட்டி கோர்ட்டில் வாலிபர் ஒருவர் சரணடைந்தார்.

பண்ருட்டி,

புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாம்பசிவம்(வயது 36). இளைஞர் காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளராக இருந்த இவர், அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவரது தங்கைக்கு கடந்த 7-ந்தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கடந்த 31-ந்தேதி காலை 8.30 மணி அளவில் வீட்டில் இருந்து உறவினர் ராஜதுரை என்பவருடன் சாம்பசிவம் காரில் புறப்பட்டார். காரை டிரைவர் ஜெயப்பிரகா‌‌ஷ் ஓட்டினார். அப்போது, கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே இருந்த வேகத்தடையை கடந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல் திடீரென காரை வழிமறித்தது. அவர்களில் ஒருவர் காரை நோக்கி வெடிகுண்டுகளை வீச முயன்றார். விபரீதத்தை உணர்ந்த சாம்பசிவம், ராஜதுரை, டிரைவர் ஜெயப்பிரகா‌‌ஷ் ஆகியோர் காரை விட்டு இறங்கி ஓடினர். ஆனால் சாம்பசிவத்தை குறிவைத்து விடாமல் துரத்திய மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகளை வீசியும் கொலை செய்தது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் சாம்பசிவத்தின் உறவினர் ராஜதுரை புகார் அளித்தார். அதில் கிருமாம்பாக்கம் அமுதன், கூடப்பாக்கம் அன்பு என்ற அன்பரசன், கெவின், மணிமாறன், சார்லஸ், மற்றொரு நபர் என 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார். இதில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வருபவர்களில் ஒருவரான பிள்ளையார்குப்பம் பிப்டிக் ரோடு முனுசாமி மகன் சுபா‌‌ஷ்(வயது 33) என்பவரை வக்கீல் வெங்கடபதி பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-க்கு நேற்று காலை அழைத்து வந்து, மாஜிஸ்திரேட்டு கற்பகவல்லி முன்னிலையில் சரணடைய செய்தார். இதையடுத்து சுபாஷை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கற்பகவல்லி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கடலூர் கேப்பர்மலை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story