செம்மாங்குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் இடித்து அகற்றம்


செம்மாங்குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 1:03 PM GMT)

நாகர்கோவில் செம்மாங்குளத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை பொதுப்பணிதுறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி செல்லும் வழியில் செம்மாங்குளம் உள்ளது. பழமையான இந்த குளத்தை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்மாங்குளத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது காந்தாரியம்மன் கோவில் தெரு மற்றும் கட்டபொம்மன் தெருவில் 17 வீடுகள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக 8 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மீதி இருந்த வீடுகளுக்கு அதிகாரிகள் நோட்டீசு வழங்கி இருந்தனர்.

இந்த நிலையில் மீதிஇருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டனர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளாக இடிக்கப்பட்டன. காந்தாரியம்மன் கோவில் தெருவில் 4 வீடுகளும், அதன் அருகே ஒரு வீடும் முதலில் இடிக்கப்பட்டன.

முன்னதாக வீடுகளில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு வீடுகள் இடித்து தரைமட்டமாகப்பட்டன. வீடுகள் இடிபடுவதை பார்த்த உரிமையாளர்கள் கதறி அழுதார்கள். சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகள் அகற்றப்பட்டதால் அதில் வசித்தவர்கள் செய்வதறியாது புலம்பினர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகளை நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

 செம்மாங்குளத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி ஏற்கனவே சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கினோம். மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்றும் தெரிவித்தோம். எனினும் ஆக்கிரமிப்புகளை அவர்கள் அகற்றவில்லை. எனவே ஆக்கிரமிப்பு வீடுகள் பொதுப்பணித்துறை சார்பில் அகற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே குளத்தின் கரையை பலப்படுத்தும் பணி மேற்கொண்டபோது 8 வீடுகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல் வந்துவிட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர முடியவில்லை. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story