மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்; 15 கி.மீ. தூரம் போலீசார் விரட்டி சென்று மடக்கினர்
திருச்சியில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தி வந்த லாரியை 15 கி.மீ. தூரம் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். நாகர்கோவில் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மணல் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு மணல் கடத்த முயற்சிகள் நடப்பதாக மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலீபனுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து மணல் கடத்தல் லாரியை பிடிப்பதற்காக சப்–இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் நேற்று காலை நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் லாரி நிற்கவில்லை. போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றது. உடனே போலீசார் தங்களது வாகனத்தில் லாரியை விரட்டினர். எனினும் லாரியை டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் அருகே வந்ததும் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதாவது சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டி வந்து மடக்கி பிடித்தனர். அதன்பிறகு லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 5 யூனிட் மணலை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து லாரி டிரைவரான மேல்புறம் அண்டுகோடு மேலபள்ளிவிளையை சேர்ந்த கிரிஷ்குமார் (வயது 32) மற்றும் உதவியாளரான ஆளுவிளைவீட்டை சேர்ந்த சாஜி (42) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மணலை திருச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் லாரிக்கு முன்னால் ஒரு காரும் சென்றுள்ளது. அந்த காரில், லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் இருந்துள்ளனர். வரும் வழியில் போலீசார் யாரேனும் இருக்கிறார்களா? என்று நோட்டமிடும் பணியை காரில் இருந்தவாரே லாரி உரிமையாளர் மேற்கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கிரிஷ்குமார் மற்றும் சாஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரி உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். லாரியை போலீசார் கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story