புதிய பஸ்நிலைய பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் ; அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி


புதிய பஸ்நிலைய பணிகள் 6 மாதத்தில் முடிக்கப்படும் ; அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-12T21:03:01+05:30)

வேலூர் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிக்கான பூமிபூஜையை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார்.

வேலூர், 

வேலூர் பாலாற்றங்கரையில், செல்லியம்மன் கோவில் அருகே கடந்த 2005-ம் ஆண்டுமுதல் புதிய பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ்நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.46 கோடியே 51 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட உள்ளது.

புதிய பஸ்நிலையத்தில் 84 பஸ்கள் நிற்கும்வகையில் நிலை நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. மேலும் தரைத்தளம், முதல்தளத்துடன் 84 கடைகளும் இடம்பெறுகின்றன. பஸ்நிலைய கட்டுமான பணிக்காக ஏற்கனவே பஸ்நிலையத்தில் இருந்த கட்டிடங்களை இடிக்கும் பணிநடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிக்கான பூமிபூஜை நேற்று காலை நடந்தது. அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பூமிபூஜையை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஜெயலலிதா வழியில் நடக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக வேலூர் பஸ்நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.46 கோடியே 51 லட்சத்தில் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

9.25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பஸ்நிலையம் வருங்காலங்களில் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. 2042-ம் ஆண்டு மக்கள்தொகையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது.

மேலும் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலங்கள், புறவழிச்சாலைகள் அமைக்க 15 நாட்களுக்கு முன்பு திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கித்தருமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 6 மாதத்தில் புதிய பஸ்நிலைய பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் லோகநாதன், சம்பத், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, ஆவின் தலைவர் வேலழகன், தகவல்தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜனனீ சதீஷ்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலச்சந்தர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story