செவிலியர் கற்பழித்து கொடூரக் கொலை 2 பேருக்கு தூக்கு தண்டனை நெல்லை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
அம்பை அருகே செவிலியர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
நெல்லை,
அம்பை அருகே செவிலியர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
செவிலியர் கொலை
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகன் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். செவிலியரின் கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால், அவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
கடந்த 29–9–2008 அன்று வீட்டில் செவிலியர் தனியாக தூங்கிக் கொண்டு இருந்தார். அன்று இரவு 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் மாடியில் இருந்து வீட்டிற்குள் புகுந்தது. வீட்டில் இருந்த செவிலியரை வாயில் துணியை பொத்தி சிலர் கற்பழித்தனர். பின்னர் அவரது கழுத்தை கயிறால் இறுக்கி கொடூரமாக கொலை செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 25 கிராம் தங்க நகைகளையும் கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
6 பேர் கைது
மறுநாள் காலையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் செவிலியர் வீடு வெகுநேரம் பூட்டிக் கிடந்ததை பார்த்து கல்லிடைக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, செவிலியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி தலைவன் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (வயது 21), அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த ராஜா மகன் மகேந்திரன் (24), சுந்தரம் மகன் வசந்தகுமார் (30), கல்லிடைக்குறிச்சி தெற்கு புதுத்தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் ராஜேஷ் (27), கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பெரியவிளை தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கணேசன் (51), தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த செந்தில்வேல் மகன் சின்னத்துரை (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
டி.என்.ஏ. பரிசோதனை
தொடர்ந்து நடத்திய விசாரணையில் செவிலியரை நகைக்காக கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கார்த்திக், மகேந்திரன், வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோருடைய டி.என்.ஏ. பகுப்பாய்வுக்கு எடுக்கப்பட்டு, சென்னைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோர் செவிலியரை கற்பழித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கல்லிடைக்குறிச்சி போலீசார் 2 பேர் மீது 449, 302, 376 ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தூக்கு தண்டனை
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி மாலையில் தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட வசந்தகுமார், ராஜேஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதாவது அரசு ஊழியரான செவிலியர் வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கு ஆயுள் தண்டனையும், கற்பழித்து கொலை செய்ததற்காக தூக்கு தண்டனையும், 376 சட்டப்பிரிவின் படி 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். செவிலியர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story