மாமல்லபுரத்தில் குரங்குகள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மாமல்லபுரத்தில் குரங்குகள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2020 10:30 PM GMT (Updated: 12 Feb 2020 4:56 PM GMT)

மாமல்லபுரத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை நாள்தோறும் மாதா கோவில் தெரு, வேதாசலம் நகர், அம்பேத்கர் தெரு, அண்ணாநகர், ஒத்தவாடை தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பழங்கள், தின்பண்டங்களை தூக்கி சென்று விடுகின்றன. சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.

அதுமட்டுமில்லாமல் அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கணேசரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை கண்டுகளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பைகளில் எடுத்து வரும் உணவுப்பொருட்களை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்று விடுகின்றன. சாலையில் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பும் உள்ளுர் மக்களையும் அச்சுறுத்தி அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களை வழியிலேயே பறித்து சென்றுவிடுகின்றன.

கூட்டம், கூட்டமாக வரும் குரங்குகளின் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தின்பண்டம் கொடுக்காதவர்களை தாக்குகிறது.

இதற்கு முன்பு மாமல்லபுரம் மலைக்குன்றுகளில் உள்ள மரங்களிலும், புதர்களிலும் குரங்குகள் உயிர் வாழ்ந்து வந்தன.

இதற்கிடையில் மலைக்குன்று பகுதிகளில் புதர்குன்றுகளில் தனிமையில் ஒதுங்கும் காதல் ஜோடிகளின் செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், தொல்லியல் துறை நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மரங்களையும், செடி, கொடிகளையும், புதர்களையும் அகற்றிவிட்டன. இதனால் தங்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் குரங்குகள் கூட்டம், கூட்டமாக ஊர்பகுதிக்குள் வந்துவிட்டன.

எனவே வனத்துறை நிர்வாகம் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடித்து காட்டில் கொண்டுபோய் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story