ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றிய போது விபரீதம்: சிகரெட் நெருப்பால் உடல் கருகிய டிரைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றிய போது சிகரெட் நெருப்பால் உடல் கருகிய டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
அரியலூர் மாவட்டம் மன்னக்காடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்க்குடிமகன் (வயது 34). இவர் சென்னையில் தங்கி, ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று காலை தமிழ்க்குடிமகன் அடையாறு ராம்நகர் காந்தி மண்டபம் அருகே ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அப்போது பெட்ரோல் இல்லாமல் ஆட்டோ நடுவழியில் நின்றது.
இதனால் அவர் ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று கேனில் பெட்ரோலை வாங்கி வந்து ஊற்றினார். அப்போது தமிழ்க்குடிமகன் சிகரெட்டை பற்ற வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக சிகரெட் நெருப்பு பெட்ரோலில் விழுந்தது.
இதில் குபீரென்று தீப்பிடித்து அவர் உடல் முழுவதும் பரவியது. வலியால் அலறித்துடித்த அவரை அப்பகுதி பொதுமக்கள், உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் 75 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story