மாவட்ட செய்திகள்

கூடலூரில் வாழைகள் சாகுபடி அதிகரிப்பு: வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை + "||" + The increase in banana cultivation in Gudalur: Heavy fall in banana prices - Farmers are concerned

கூடலூரில் வாழைகள் சாகுபடி அதிகரிப்பு: வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

கூடலூரில் வாழைகள் சாகுபடி அதிகரிப்பு: வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
கூடலூரில் வாழைகள் சாகுபடி அதிகரிப்பின் காரணமாக வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்,

நீலகிரியின் முதுகெலும்பாக பச்சை தேயிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஊட்டி பகுதியில் பச்சை தேயிலைக்கு இணையாக கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிப்பிளவர், உருளைக்கிழங்கு, நூல்கோல் உள்ளிட்ட மலை காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. இதேபோல் கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, குறுமிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கி உள்ளது.

இதனால் கோடை கால பயிர்களான பாகற்காய், அவரைக்காய், தட்டைப்பயறு, பஜ்ஜி மிளகாய் உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஒவ்வொரு காலக்கட்டங்களில் நிலவும் காலநிலைகளுக்கு ஏற்ப கூடலூர் பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் நேந்திரன் வாழை சாகுபடி மட்டும் எந்த காலநிலையாக இருந்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறைந்த மற்றும் அதிகளவு நீர் இருந்தாலும் வளரும் தன்மை உடையது என்பதால் விவசாயிகள் ஆண்டு முழுவதும் நேந்திரன் வாழை பயிரிடுகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் நேந்திரன் வாழைத்தார்கள் சிப்ஸ் தயாரிப்பதற்காக கேரளாவுக்கு அதிகளவு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் அளவுக்கு அதிகமாக மழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் வாழை உள்பட அனைத்து விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. விளைச்சல் சரிந்ததால் நேந்திரன் வாழைத்தார்களின் விலை உயர்ந்தது. இதனால் நேந்திரன் வாழைப்பழங்களின் விலை கிலோ ரூ.110 வரை விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை நேந்திரன் வாழை கிலோ ரூ.46 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டில் நன்கு மழை பெய்துள்ளதாலும், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பால் விவசாயிகள் நேந்திரன் வாழைகளை நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்து உள்ளனர். இதே நிலை கேரளாவின் வயநாடு பகுதியிலும் காணப்படுகிறது. இதனால் நேந்திரன் வாழை விளைச்சல் அதிகரித்ததால் அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி தமிழகத்தின் சமவெளி பகுதியிலும் காணப்படுகிறது.

தற்போது கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாய பராமரிப்பு செலவு, தொழிலாளர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை ஈடுசெய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்காக பெருமளவு நேந்திரன் வாழைத்தார்களை கேரள வியாபாரிகள் கூடலூர் பகுதியில் மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். இதை கருத்தில் கொண்டு கூடலூர் விவசாயிகள் அதிகளவு நேந்திரன் வாழை பயிரிட்டுள்ளனர். ஆனால் விளைச்சல் அதிகரித்து விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்குமா? என கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- அளவுக்கு அதிகமாக மழை பெய்து விவசாய விளைபொருட்கள் சேதம் அடைந்து ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது. இல்லை எனில் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து விடுகிறது. இதனால் விவசாயத்தில் தொடர் ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.