பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி வாகை சூட வேண்டும் - அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
நாகையில் நடந்த அ.தி. மு.க. கூட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி வாகை சூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகையில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜீவானந்தம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை நகர செயலாளர் தங்ககதிரவன் வரவேற்றார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது.
தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி பெற்று, அதில் நாகை மாவட்டத்திற்கும் மருத்துவக்கல்லூரி அமைக்க ஆணையிட்டு பணிகளை மேற்கொள்ளவும் வரும் கல்வியாண்டு முதல் மருத்துவ மாணவ-மாணவிகளை கல்லூரியில் சேர்ந்து பயில வாய்ப்பளித்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது.
காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை மத்திய அரசு ஏற்றுகொண்டு ரூ.60 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்துள்ளதற்கு நன்றி தெரிவிப்பது.
வரும் பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் திண்ணை பிரசாரம் மேற்கொண்டு எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி வாகை சூட ஜெயலலிதா பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆசைமணி, சக்தி, விஜயபாலன், ரங்கநாதன், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story