தேன்கனிக்கோட்டை அருகே கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் பறித்த லாரி டிரைவர் கைது


தேன்கனிக்கோட்டை அருகே கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் பறித்த லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2020 4:15 AM IST (Updated: 13 Feb 2020 2:46 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் பறித்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள போலீஸ்காரரை அஞ்செட்டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மதுராஜ் ரெட்டி. இவர் கடந்த மாதம் 28-ந் தேதி பெங்களூருவில் இருந்து ஒகேனக்கல்லுக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். வழியில் குத்துகோட்டை அடுத்து மேல்பள்ளம் என்ற வனப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் போலீசார் என கூறி மதுராஜ் ரெட்டி காரை வழிமறித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் காருக்கான ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் கார் உரிமையாளர் மதுராஜ் ரெட்டியிடம் ரூ.10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பாக அவர் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதுராஜ் ரெட்டியிடம் பணம் பறித்தது, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூர் பகுதியை சேர்ந்த மாதவன் மகன் பாரதிமோகன் (வயது 27) மற்றும் அவருடைய உறவினர் நல்லம்பள்ளி அருகே உள்ள கக்கஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திகேயன் (48) என்பது தெரியவந்தது.

மேலும் பாரதிமோகன் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் பாரதிமோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story