தர்மபுரி அருகே அரசு பள்ளியில் எலி மருந்து கலந்த எள் உருண்டைகளை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


தர்மபுரி அருகே அரசு பள்ளியில் எலி மருந்து கலந்த எள் உருண்டைகளை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 13 Feb 2020 5:00 AM IST (Updated: 13 Feb 2020 3:24 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே எலி மருந்து கலந்த எள் உருண்டைகளை பள்ளிக்கு எடுத்து வந்து சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஅள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த தனபால் என்பவருடைய மகன் பழனிசாமி (வயது 17) என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர் பழனிசாமி வீட்டில் இருந்து எள் உருண்டைகளை பள்ளிக்கு எடுத்து வந்தார். அதை நண்பர்களான வேல்முருகன், சந்தோஷ்குமார், முகேஷ், கருணாகரன், கோவிந்தராஜ், பூவரசன், விக்னேஷ், சிலம்பரசன், பிரதீப், அய்யந்துரை, அருண்குமார், திருப்பதி ஆகியோருக்கு கொடுத்துள்ளார். இதை பழனிசாமி உள்ளிட்ட 13 பேர் சாப்பிட்டுள்ளனர். பகல் 11 மணி அளவில் 13 மாணவர்களுக்கும் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், 13 மாணவர்களையும் மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவர்கள் விஷத்தை தின்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவர்களிடம் டாக்டர்கள், ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது பழனிசாமியின் தந்தை தனபால், தோட்டத்தில் எலிகள் தொல்லையை கட்டுப்படுத்த எள் உருண்டையில் எலி மருந்தை கலந்து வீட்டில் வைத்து இருந்ததும், எலி மருந்து கலந்த எள் உருண்டைகள் என தெரியாமல் பழனிசாமி அதை வீட்டில் இருந்து பள்ளிக்கு எடுத்து வந்து நண்பர்களுக்கு கொடுத்ததும், அதை சாப்பிட்ட பழனிசாமி உள்ளிட்ட 13 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து 13 மாணவர்களையும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் தாசில்தார் கலைசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், வடிவேலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட தகவல் அறிந்ததும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு விரைந்து வந்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story