‘குடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களையும் பாதிக்கும்’ - மதுரையில் திருமாவளவன் பேச்சு


‘குடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களையும் பாதிக்கும்’ - மதுரையில் திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2020 4:15 AM IST (Updated: 13 Feb 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களையும் பாதிக்கும் என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேசினார்.

மதுரை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. சீனிநைனார் முகமது தலைமை தாங்கினார். உசேன்பாய், இக்பால் ஆகியோர் வரவேற்றனர். திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, மதுரை எம்.பி. வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது-

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 22-ந்தேதி திருச்சியில் பேரணி நடைபெற இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானதல்ல. இந்துக்களுக்கும் எதிரானது. இதனால் இந்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அனைத்து தரப்பு மக்களும் இதனை ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும்.

தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஓரணியில் திரண்டு பா.ஜனதாவை துரத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பா.ஜனதா ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லதல்ல. பல மாநில தலைவர்கள் பா.ஜனதாவை எதிர்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்.

ஒவ்வொரு சமூக மக்களையும் பிரிப்பதற்காக பல திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை செயலற்றதாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. அதன் காரணமாக தான் மதத்தால் பிளவு ஏற்படுத்தும் வகையில் பல சட்ட திருத்தங்களை கொண்டு வர முயற்சி செய்கிறது. இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் என நினைக்கிறது. அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,

டெல்லியை போன்று அ.தி.மு.க. 3-வது முறை ஆட்சியமைக்கும் என்ற கனவு பா.ஜனதாவோடு இணைந்து செயல்படும் வரை நிறைவேறாது. டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கதக்கது. இதை அறிவிப்போடு விட்டு விடாமல் சட்டமாக கொண்டு வர வேண்டும். கடலூரில் எண்ணெய் கிணறு தோண்டும் முயற்சி ஈடுபடும் பணியானது சுற்றுச்சூழலை பாதிக்கும் விதமாக இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story