சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கு: கீழ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து 6 பேருக்கு ஆயுள் தண்டனை - மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு


சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கு: கீழ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து 6 பேருக்கு ஆயுள் தண்டனை - மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 4:15 AM IST (Updated: 13 Feb 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்த கீழ்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததுடன், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

மதுரை,

மதுரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர், வல்லரசு (வயது 25). மதுரை யானைக்கல் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தார். அவருடன் பிரபு உள்ளிட்ட சிலரும் சுமைதூக்கும் வேலை செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 27.10.2008 அன்று யானைக்கல் வைகை ஆற்றுப்பாலத்தின்கீழ் நின்று கொண்டு இருந்த பிரபு மீது வல்லரசு மோதிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு, தகராறில் ஈடுபட்டார். இது அவர்களுக்குள் பிரச்சினையாக உருவெடுத்தது.

இதையடுத்து வல்லரசுவை பழிவாங்கும் நோக்கத்தில் அன்றைய தினமே சுரேஷ், வீரா என்ற வீர செல்வம், செல்லப்பாண்டி, பாண்டியராசா, பெரிய பாண்டி ஆகியோருடன் பிரபு ஆட்டோவில் வந்தார். பின்னர் அங்கு நின்றிருந்த வல்லரசுவை 6 பேர் கொண்ட அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இந்த சம்பவம் குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குபதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து வல்லரசுவின் தந்தை ராஜேந்திரன் சார்பில் வக்கீல் ஜின்னா, மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், வல்லரசு கொலை வழக்கில் கைதான பிரபு, சுரேஷ், வீரா என்ற வீரசெல்வம், செல்லப்பாண்டி, பாண்டியராசா, பெரியபாண்டி ஆகிய 6 பேரை விடுதலை செய்து கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும், அவர்கள் 6 பேருக்கும் ஆயுள்தண்டனை விதிப்பதாகவும் நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

Next Story