வங்கி கடனுக்காக வீடு, நிலத்தை ஜப்தி செய்ய முயன்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி - பல்லடம் அருகே பரபரப்பு


வங்கி கடனுக்காக வீடு, நிலத்தை ஜப்தி செய்ய முயன்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி - பல்லடம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 3:45 AM IST (Updated: 13 Feb 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே வங்கி கடனுக்காக வீடு, நிலத்தை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயன்ற போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி கவுண்டரின் மகன் ஈஸ்வரன்(வயது 70). இவருடைய மனைவி சித்ராதேவி(65). இவர்களது மகன் பிரபு(32). பிரபுவின் மனைவி இசையமுது(28).

கடந்த 2011-ம் ஆண்டு ஈஸ்வரன் விசைத்தறி கூடம் அமைப்பதற்காக தனது வீடு, விசைத்தறி குடோன் உள்ளிட்ட 71 சென்ட் நிலத்தை அவினாசியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றார். அதன்பிறகு கொஞ்சம், கொஞ்சமாக கடனையும், வட்டியும் அடைத்து வந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு ரூ.65 லட்சம் பாக்கி இருந்தது. அதன்பிறகு அவரால் கடனையும், வட்டியையும் செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த 2018-ல் அவரது வங்கி கடன் ரூ.1 கோடியே 10 லட்சம் ஆனது. இந்த தொகையை செலுத்துமாறு வங்கி நிர்வாகம் சார்பில் ஈஸ்வரனுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இருப்பினும் அவரால் கடன் தொகையை அடைக்க முடியவில்லை.

இதையடுத்து கடந்த 20.12.2018 அன்று வங்கி நிர்வாகம் ஈஸ்வரனின் வீடு, விசைத்தறி குடோன் உள்ளிட்ட 71 சென்ட் நிலத்தை ஏலம் விட்டது. அப்போது பாலகிருஷ்ணன் என்பவர் ரூ.91 லட்சத்துக்கு அவற்றை ஏலம் எடுத்தார். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டு காலமாக தான் ஏலம் எடுத்த வீடு, நிலத்தை மீட்டு தருமாறு வங்கி அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் ஈஸ்வரனின் வீடு, நிலத்தை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் முறைப்படி கலெக்டரிடம் அனுமதி கோரினார்கள். கலெக்டர் அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்று மாலை 3 மணி அளவில் வங்கி அதிகாரிகள், பல்லடம் வருவாய்த்துறையினர், போலீசார் சின்னியகவுண்டன்பாளையத்துக்கு வந்தனர்.

அங்கு ஈஸ்வரனின் வீடு, விசைத்தறி குடோனை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய முயன்றனர். அப்போது ஈஸ்வரனின் குடும்பத்தினர் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடல்நலக்குறைவால் ஈஸ்வரன் வீட்டில் கட்டிலில் அமர்ந்திருந்தார்.

ஈஸ்வரனின் மகன் பிரபு, அதிகாரிகளிடம், முறைப்படி நோட்டீசு வழங்காமல் எங்கள் வீடு, நிலத்தை எப்படி அளவீடு செய்யலாம் என வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அதிகாரிகள், முறைப்படி தான் வீடு, விசைத்தறி குடோன் ஏலம் விடப்பட்டு ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக கூறியபடியே வீட்டுக்குள் சென்றார். அங்கு மண்எண்ணெய் கேனை திறந்து தனது மனைவி இசையமுது, தாய் சித்ராதேவி, தந்தை ஈஸ்வரன் ஆகியோர் மீது ஊற்றினார். பின்னர் தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு வந்த பெண் போலீசார் வீட்டில் இருந்த குடங்களில் இருந்த தண்ணீரை எடுத்து 4 பேர் மீதும் ஊற்றினார்கள். தற்கொலைக்கு முயன்ற 4 பேரையும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி சமாதானப்படுத்தினார்கள்.

இதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நில அளவீடும் பணியை தொடர்ந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story