சிவகங்கை அரசு பள்ளியில், ரூ.99 லட்சத்தில் கூட்டரங்கம் கட்டும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்


சிவகங்கை அரசு பள்ளியில், ரூ.99 லட்சத்தில் கூட்டரங்கம் கட்டும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Feb 2020 10:15 PM GMT (Updated: 13 Feb 2020 12:06 AM GMT)

சிவகங்கை மருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பில் கூட்டரங்கம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி துறையின் மூலம் ரூ.99 லட்சம் மதிப்பில் கூட்டரங்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு கூட்டரங்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர், பள்ளிக்கல்வி துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்கள் எளிதாக நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி கல்வி பயில அனைத்து அரசு பள்ளிகளிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதுடன், அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது சிவகங்கையில் பள்ளிக்கல்வி துறையின் மூலம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டரங்க கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. கட்டிடப்பணி 3 மாத காலத்திற்குள் முடிவடையும். இந்த கூட்டரங்கில் அனைத்து வகையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கணினி வசதிகள் அமைக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் பயிற்சி வழங்கிடவும், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டங்கள் நடத்தவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்துறைத் தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story