புதுச்சேரி பிரச்சினைகளை பேச சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்


புதுச்சேரி பிரச்சினைகளை பேச சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Feb 2020 12:18 AM GMT (Updated: 13 Feb 2020 12:18 AM GMT)

புதுச்சேரி பிரச்சினைகளை பேச சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் நாராயணசாமி தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

இந்தியாவில் முதன் முதலாக நாம்தான் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். புதுவை பிரச்சினைகளை பற்றி பேசவும் இதேபோல் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் நாம் என்னென்ன திட்டம் கொண்டுவந்தோம். அதை செயல்படுத்த விடாமல் தடுத்தது யார்? என்று கூறவேண்டும்.

இந்த மாநிலத்தில் பிறந்த நம்மை சட்டமன்றத்தில் தீ்ர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று தடுக்க இவர்கள் யார்? சூடு சொரணை இல்லாமலா நாம் உள்ளோம்.

நான் எப்போதோ பதவியை ராஜினாமா செய்திருப்பேன். ஆனால் மக்கள் நம்மை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்துள்ளனர். மாநிலத்தில் 10 ஆயிரம் பேர் சம்பளம் இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க கவர்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்?

நாம் ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்க முடிவு எடுத்தால் இவர் மில்லை மூட சொல்கிறார். தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய பணத்தை கொடுக்க இவர் நடவடிக்கை எடுத்தாரா? நமது உரிமையை நாம் பெறமுடியவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரே நபர்தான் தடையாக உள்ளார். அதில் பெரும்பாலும் எனது இலாகாதான். குளம், ஏரிகளை தூர்வார ரூ.17 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கினோம். இதுவரை அது நடைபெறவில்லை.

பணத்துக்கு பதிலாக அரிசி வழங்கினால் பல கோடி பணம் மிச்சமாகும். அதிகாரிகளை நாம் கூப்பிட்டால் கவர்னர் மாளிகையில் இருப்பதாக சொல்கிறார்கள். அதிகாரிகள் 2 பக்கமும் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். இதனால் பாதிப்பு மக்களுக்குத்தான்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியும் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் தர மறுக்கிறார். நாடாளுமன்ற முடிவினை ஏற்கும் கவர்னர் சட்டமன்ற முடிவினை ஏற்க மறுப்பது ஏன்? இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

Next Story