சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல் ரூ.31½ லட்சம் வெளிநாட்டு பணம், செல்போன்களும் சிக்கின


சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்   ரூ.31½ லட்சம் வெளிநாட்டு பணம், செல்போன்களும் சிக்கின
x
தினத்தந்தி 13 Feb 2020 5:52 AM IST (Updated: 13 Feb 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.31½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், செல்போன் உள்ளிட்டவைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராசக்காளி(வயது 34) என்பவரை சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 424 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல்

அதேபோல் துபாயில் இருந்து திருவனந்தபுரம் வழியாக வந்த விமானத்தில் பயணம் செய்த பீகாரைச் சேர்ந்த தீரஜ்குமார்(34) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.38 லட்சம் மதிப்புள்ள 908 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த தேவி(40) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர் நெப்கின் பேடில் மறைத்து வைத்து இருந்த ரூ.12 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 294 கிராம் தங்கத்தையும், சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ரவி(40) என்பவரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.12 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 307 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

வெளிநாட்டு பணம்-செல்போன்கள்

சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அஜீஸ் கிப்லி(25) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், சவுதி ரியால்களை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயன்றதை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பசீர்சையத்(24) என்பவரது உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.24 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 27 ஐபோன்கள், 16 ஐபேடுகள், 2 டி.வி.கள், 2 கைக்கெடிகாரங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 6 பேரிடம் இருந்து ரூ.80 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 933 கிராம் தங்கம், ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் எலக்ட்ரானிக் பொருள் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், பீகாரை சேர்ந்த தீரஜ்குமார் என்பவரை கைது செய்தனர். மற்ற 5 பேரிடமும் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Next Story