தாளவாடி அருகே தொடர் அட்டகாசம், மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி அடித்துக்கொன்றது - மலைக்கிராம மக்கள் பீதி


தாளவாடி அருகே தொடர் அட்டகாசம், மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி அடித்துக்கொன்றது - மலைக்கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 12 Feb 2020 9:45 PM GMT (Updated: 13 Feb 2020 12:30 AM GMT)

தாளவாடி அருகே மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி அடித்துக்கொன்றது. இதனால் மலைக்கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தாளவாடி, 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், ஜீர்கள்ளி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகளில் குறிப்பாக சிறுத்தை, புலி, யானை போன்றவை வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதில் சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆடு, மாடுகள் மற்றும் காவலுக்காக விடப்பட்ட நாய்களையும் வேட்டையாடி வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தொட்டமுதிகரை மலைக்கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை, தோட்டத்தில் காவலுக்காக நின்ற நாயை கடித்துக்கொன்றது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று தலமலை வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே உள்ள தொட்டாபுரம் காந்திநகர் கிராமத்துக்குள் புகுந்த புலி ஒன்று மாட்டை அடித்துக்கொன்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

காந்திநகர் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 28). விவசாயி. இவர் 7 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் இவர் நேற்று காலை 8 மணி அளவில் மாடுகளை வனப்பகுதியையொட்டி உள்ள மானாவாரி நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் பகல் 11 மணி அளவில் நாகேந்திரா அங்கு சென்று பார்த்தபோது பசு மாடு ஒன்று ஏதோ விலங்கு கடித்த நிலையில் இறந்து கிடந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி தலமலை வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று மாட்டின் உடலை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால்தடத்தையும் ஆய்வு செய்தனர். அதில் பதிவானது புலியின் கால்தடம் என்பதும், வனப்பகுதியில் இருந்து வந்த புலி மாட்டை அடித்துக்கொன்றுவிட்டு சென்றதும் தெரிய வந்தது.

தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை வனச்சரகங்களில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மலைக்கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். 

Next Story