4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு ; கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் தற்போது கும்பப்பூ நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் 2019– 2020–ம் ஆண்டுக்கு 1–10–2019 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகையுடன் சேர்த்து நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
‘ஏ‘ கிரேடு நெல் ரகத்துக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.1,835–ம், மாநில அரசின் ஊக்கத் தொகையாக (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ.70–ம் சேர்த்து மொத்தம் ரூ.1,905 வழங்கப்படும்.
பொது ரக நெல்லுக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,815–ம், மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.50–ம் சேர்த்து மொத்தம் 1,865 வழங்கப்படும்.
மேலும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட தரக்குறியீடுகளின்படி நெல் கொள்முதல் செய்யப்படும்.தரக்குறியீடுகளாக அயல் பொருட்களான கனிம பொருட்கள் 1 சதவீதம், கரிம பொருட்கள் 1 சதவீதம், சேதமடைந்த நிறம் மங்கிய, முளைவிட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்கள் 5 சதவீதம், முதிராத, சுருங்கிய மற்றும் மடிப்பு ஏற்பட்ட தானியங்கள் 3 சதவீதம், கீழ்ரக கலப்பு 6 சதவீதம், ஈரப்பதம் 17 சதவீதம் அதிகபட்சமாக இருக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது செண்பகராமன்புதூர் பகுதியில் செண்பகராமன்புதூரில் உள்ள நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்திலும், திட்டுவிளை பகுதியில் திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திலும், பறக்கை– புத்தளம் பகுதியில் அரியபெருமாள்விளையில் உள்ள புத்தளம் பஞ்சாயத்து அலுவலக சாலையிலும், திங்கள்நகர் பகுதியில் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரும்போது 50 கிலோ சிப்பமிட்டு கரத்தீர்வை ரசீது, சிட்டா நகல், பட்டா நகல், அடங்கல், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. கோடு உள்ள வங்கி புத்தக முன்பக்க தெளிவான ஒளிநகல் ஆகியவற்றை வழங்க வேண்டும். நெல் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story