அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைவில் அடிக்கல் நாட்டுவிழா அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
‘திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைவில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்‘ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்,
‘திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு விரைவில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்‘ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
காத்திருப்பு கூடம்
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளை பார்ப்பதற்கும், தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு வசதியாக, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் காத்திருப்பு கூடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றி, பொதுமக்கள் காத்திருப்பு கூடத்தை திறந்து வைத்தார். இதற்கிடையே திண்டுக்கல் அருகே ஒடுக்கத்தில் 8.6 எக்டேர் பரப்பளவில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்படுகிறது.
அரசு மருத்துவக்கல்லூரி
இதையொட்டி ஒடுக்கத்தில் நிலத்தை சமப்படுத்தும் பணி நடக்கிறது. அந்த பணியையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடம் கட்டப்படும் இடத்தை சமப்படுத்தும் பணியை துரிதப்படுத்தும்படி அறிவுறுத்தினார். அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய முயற்சியால், ஒரே நேரத்தில் 9 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில் ஒரு மருத்துவக் கல்லூரி திண்டுக்கல்லில் அமைய இருக்கிறது. இந்த அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்–அமைச்சர் அடிக்கல் நாட்டுவார். இதற்கான விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார், நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story