ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கூலிப்படைக்கு உதவியதாக போலீஸ் ஏட்டு கைது


ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கூலிப்படைக்கு உதவியதாக போலீஸ் ஏட்டு கைது
x
தினத்தந்தி 14 Feb 2020 4:00 AM IST (Updated: 13 Feb 2020 8:19 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கூலிப்படையினருக்கு உதவியதாக போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் உத்தரவிட்டு உள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள சங்கராப்பாளையம் ஊஞ்சக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 48). அ.தி.மு.க. பிரமுகரான இவர் சங்கராப்பாளையம் ஊராட்சி தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சங்கராப்பாளையம் அருகே கூலிப்படையினரால் ராதாகிருஷ்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படையை சேர்ந்த சரவணன் (25), பாலா என்கிற பாலமுருகன் (30), ராஜேஸ்குமார் என்கிற சதீஸ்குமார் (27), காட்டான் என்கிற முத்துமாரி (25), மிட்டாய் என்கிற சிவா (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சங்கராப்பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பழிக்கு பழியாக சேகரின் மகன் அரவிந்த் (25) என்பவர் கூலிப்படையை வைத்து ராதாகிருஷ்ணனை கொலை செய்தது,’ தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் பவானி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக அரவிந்தனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் கோவை நீதிமன்றத்தில் அரவிந்த் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை போலீஸ் காவலிலில் எடுத்து விசாரிக்க வெள்ளித்திருப்பூர் போலீசார் பவானி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு அளித்தனர். அரவிந்தனை 2 நாட்கள் காவலில் விசாரிக்க பவானி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதைத்தொடர்ந்து காவலில் எடுத்து அரவிந்தனை போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், ‘ராதாகிருஷ்ணனை கொலை செய்த கூலிப்படையினருக்கு அரவிந்தனின் மாமா பிரபாகரன் (42) என்பவர் உதவியதும், அவர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணியாற்றி வந்ததும்,’ தெரியவந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் ஊராட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கில் கூலிப்படையினருக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் உத்தரவிட்டு உள்ளார்.

கூலிப்படைக்கு உதவியதாக போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story