மாவட்டம் முழுவதும் 77 ஊர்களில் மதுவின் தீமைகள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் பிரசாரம்


மாவட்டம் முழுவதும் 77 ஊர்களில் மதுவின் தீமைகள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் பிரசாரம்
x
தினத்தந்தி 13 Feb 2020 9:30 PM GMT (Updated: 13 Feb 2020 2:56 PM GMT)

மாவட்டம் முழுவதும் 77 ஊர்களில் மதுவின் தீமைகள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

திண்டுக்கல், 

மாவட்டம் முழுவதும் 77 ஊர்களில் மதுவின் தீமைகள் குறித்து கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

77 ஊர்களில் பிரசாரம் 

தமிழகத்தில் மதுபானம் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரியவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பாதவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். மதுபழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இதை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வாரம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இதற்காக திண்டுக்கல், சிவகங்கையை சேர்ந்த 2 கலைக்குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த கலைக்குழுவினர் மாவட்டம் முழுவதும் 77 ஊர்களில் கலைநிகழ்ச்சிகள் மூலம் மதுவின் தீமைகள் குறித்து பிரசாரம் செய்கின்றனர்.

போதையால் ஏற்படும் சிக்கல் 

இதன் தொடக்க நிகழ்ச்சி, திண்டுக்கல் காமராஜர் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலால் உதவி ஆணையர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். இதில் கோட்ட கலால் அலுவலர் கேசவன், மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மது, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதன்மூலம் குடும்பத்தில் உருவாகும் பிரச்சினைகள், பொருளாதார சிக்கல் குறித்து கலைக்குழுவினர் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர். மேலும் மதுப்பிரியர்களை தாக்கும் நோய்கள், மனம் மற்றும் சமுதாய ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்கினர். மேலும் ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் ஆகியவை மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story