பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்தது
தொடர்ந்து 116 நாட்கள் 100 அடியாக நீடித்து வந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, புஞ்சைபுளியம்பட்டி, பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள், 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி மக்களின் குடிநீர் தேவையும் பவானிசாகர் அணை மூலம் பூர்த்தியாகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த அக்டோபர் மாதம் 20-ந் தேதி அதிகாலை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததுடன், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
இதனால் கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி நள்ளிரவில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. இதற்கிடையே பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட, அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.09 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 942 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 1,300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 99.81 அடியாக இருந்து. அணைக்கு வினாடிக்கு 864 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும், பவானி ஆற்றில் வினாடிக்கு 1,300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
தொடர்ந்து 116 நாட்கள் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக நீடித்து வந்த நிலையில் நேற்று 100 அடிக்கும் கீழ் குறைந்தது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story