காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் பறிமுதல் ; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சத்தியமங்கலம், அந்தியூர் பகுதிகளில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஈரோடு,
சத்தியமங்கலம் பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் அருகே உள்ள கடைகளில் புகையிலை பொருட்களான பீடி, சிகரெட் மற்றும் காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் அருகில் 100 மீட்டர் தூரத்துக்கு உள்பட்ட கடைகளில் பீடி, சிகரெட் மற்றும் காலாவதியான பிஸ்கட் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்ய சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
அவருடைய உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, நகராட்சி சுகாதார அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் மலைச்சாமி, உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் அதிகாரிகள் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 100 மீட்டர் தொலைவுக்கு உள்பட்ட கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மொத்தம் 20 கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது 150 பாக்கெட் சிகரெட், பீடி மற்றும் காலாவதியான 50 பிஸ்கட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் கடைகளில் பீடி, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி காலவாதியான பிஸ்கட் மற்றும் உணவு பொருட்களை விற்பனை செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி, சிகரெட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை நகராட்சி குப்பைக்கிடங்குக்கு கொண்டு சென்று அதிகாரிகள் அழித்தனர்.
இதேபோல் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் போதை பொருள் கலந்து மிட்டாய் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தியூர், தவுட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகே 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளில் அந்தியூர் தாசில்தார் மாலதி, வட்ட வழங்கல் அதிகாரி அழகேசன், கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் குணசேகரன், மூர்த்தி உள்பட அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்பனை செய்யப்பட்ட சில மிட்டாய்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
போைத பொருட்கள் கலந்த மிட்டாய் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story