திண்டுக்கல் அருகே வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


திண்டுக்கல் அருகே வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
x
தினத்தந்தி 14 Feb 2020 3:00 AM IST (Updated: 13 Feb 2020 9:06 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சின்ன வெங்காயம்

நாடு முழுவதும் கடந்த ஆண்டு வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்தது. சின்ன வெங்காயம் ரூ.100-க்கும், பல்லாரி ரூ.150-க்கும் விற்பனை ஆனது. இதில் பல்லாரி வெங்காயத்தை பொறுத்தவரை வெளிமாநிலங்களில் இருந்து தான் தமிழகத்துக்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், சின்ன வெங்காயம் தமிழகத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காய சாகுபடி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனை ஆனது. ஆனால் வேர்அழுகல் நோயால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் ஆர்வம்

இதனால் பல விவசாயிகளுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்காமல் போனது. எனவே, இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை ஆர்வமுடன் சாகுபடி செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் அருகே சீலப்பாடி பகுதியில் சொட்டுநீர் பாசன முறையில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவசாயி சுருளியப்பன் கூறுகையில், கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்தை வேர்அழுகல் நோய் தாக்கியது.

இதனால் விளைச்சல் பாதியாக குறைந்து, வருமானம் பாதித்தது. எனவே, இந்த ஆண்டிலாவது லாபம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் 4 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. நல்ல விளைச்சலுடன், விலையும் கிடைத்தால் தான் வருமானம் கிடைக்கும். விளைபொருட் களுக்கு நிரந்தர விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும், என்றார்.

Next Story