சிறை நிர்வாகத்தில் நவீன முறைகளை கையாள வேண்டும் ; `ஆப்கா' துணை இயக்குனர் பேச்சு


சிறை நிர்வாகத்தில் நவீன முறைகளை கையாள வேண்டும் ; `ஆப்கா துணை இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2020 10:00 PM GMT (Updated: 13 Feb 2020 4:25 PM GMT)

மாறி வரும் காலத்திற்கேற்ப சிறை நிர்வாகத்தில் நவீன முறைகளை கையாள வேண்டும் என்று ஆப்கா துணை இயக்குனர் கருப்பண்ணன் கூறினார்.

வேலூர், 

வேலூர் தொரப்பாடியில் சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகம் (ஆப்கா)உள்ளது. இங்கு சிறைநிர்வாகத்தில் நவீன தொழில்நுட்பம் என்ற தலைப்பில் 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதைெயாட்டி நடந்த தொடக்க விழாவிற்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பியூலா இமானுவேல் வரவேற்றார். ஆப்கா துணை இயக்குனர் கருப்பண்ணன் தலைமை தாங்கி பயிற்சிக்கான புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

உலகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் பல துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அதன்படி சிறை நிர்வாகமும் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. சில காலங்களுக்கு முன்பு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் சோதனை செய்வார்கள். ஆனால் தற்போது அதற்கு மனிதஉழைப்பு தேவைப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஸ்கேனர் கருவி விமான நிலையங்களில் வந்து விட்டது. ஸ்கேனர் கருவி பயணிகளின் உடல், உடமைகளை சோதனை செய்து விடும்.

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழக சிறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரவேண்டும். வேலூர் ஜெயிலில் முன்பு சிறைவாசிகள் கைகளால் ஷூக்கள் தயாரித்தனர். தற்போது எந்திரம் மூலம் ஷூக்கள் தயாரிக்கும் பணி நடக்கிறது. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப சிறை நிர்வாகத்திலும் நவீன முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஜெயிலர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக பேராசிரியர்கள் அருண்குமார், பால்சுந்தர்சிங், ஆனந்தமுருகன், கோபி, ராஜ்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை டெல்லி காவல்துறை மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை செய்திருந்தது. முடிவில் பேராசிரியர் மதன்ராஜ் நன்றி கூறினார்.

Next Story