கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்


கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2020 3:45 AM IST (Updated: 13 Feb 2020 10:33 PM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த போக்சோ வழக்கு கைதி தப்பி ஓடிவிட்டார்.

கோவை,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், நாராயணசாமி கோவில் வீதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவருடைய மகன் சுப்பிரமணி(வயது 32). கட்டிடதொழிலாளி. இவர் கட்டிடவேலையில் சித்தாளாக வேலை பார்த்த 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் சுப்பிரமணியை கடந்த 6.9.2019-ல் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது 2.10.2019-ல் குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவருக்கு கடந்த 31-ந்தேதி கோவை சிறையில் வலிப்பு ஏற்பட்டது. உடனே சிறை அதிகாரிகள் சுப்பிரமணியை கோவை அரசு ஆஸ்பத்திரி யில் உள்ள சிறைக்கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டில் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் சுப்பிரமணி சிறைக்கைதிகள் வார்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதற்கிடையே மற்றொரு கைதி உடல் உபாதை கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றார். ஆனால் கழிவறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக அவர் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த கைதி, அங்கு பாதுகாப்புக்காக இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது கழிவறை ஜன்னலில் உள்ள கம்பியை வளைத்து சுப்பிரமணி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து ஆஸ்பத்திரி முழுவதும் தேடி னர். ஆனால் சுப்பிரமணி கிடைக்கவில்லை.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதி சுப்பிரமணியை தேடி வருகிறார்கள்.

கைதி தப்பி ஓடியது குறித்து ஆயுதப்படை போலீ்ஸ் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் வார்டில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதியை கவனக்குறைவாக தப்பவிட்டது குறித்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு ஆஸ்பத்திரி சிறை வார்டில் இருந்து போக்சோ கைதி தப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story