மாணவியை ஆசிரியர் அடித்தபோது சம்பவம்: பிரம்பு முறிந்து மற்றொரு மாணவியின் கண்ணில் பட்டதில் பார்வை பாதிப்பு


மாணவியை ஆசிரியர் அடித்தபோது சம்பவம்: பிரம்பு முறிந்து மற்றொரு மாணவியின் கண்ணில் பட்டதில் பார்வை பாதிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 5:00 AM IST (Updated: 13 Feb 2020 11:11 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளத்தில் மாணவியை ஆசிரியர் அடித்தபோது பிரம்பு முறிந்து மற்றொரு மாணவியின் கண்ணில் பட்டதில் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடங்குளம், 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவருடைய மகள் முத்தரசி (வயது 10). முத்துசெல்வன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் முத்தரசி தனது பாட்டி சுயம்புகனி பராமரிப்பில் இருந்து வருகிறார். முத்தரசி கூடங்குளத்தில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

இந்த நிலையில் வழக்கம் போல் முத்தரசி பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். இந்த பள்ளிக்கூடத்தில் ஆதிநாராயணன் என்பவர் ஆசிரியராக உள்ளார். இவர் 5-ம் வகுப்புக்கு பாடம் எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் முத்தரசி படிக்கும் வகுப்பில் ஆதிநாராயணன் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு மாணவியிடம் ஆதிநாராயணன் கேள்வி கேட்டார். ஆனால் அந்த மாணவி பதில் கூறாததால், ஆதிநாராயணன் பிரம்பால் அந்த மாணவியை அடித்தார். அந்த சமயத்தில் பிரம்பு முறிந்து அருகில் அமர்ந்து இருந்த முத்தரசி கண்ணில் பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.

இதுகுறித்து உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவியை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் மாணவியின் பார்வைக்கு டாக்டர்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை. இதனால் அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுயம்புகனி கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நிலையில் மாணவியின் உறவினர்கள் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, அவர்கள் கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆசிரியரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் வருவாய் ஆய்வாளர் சிவகுமார் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story