மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டால்தான் தேர்தல் அறிவிப்பு - மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்


மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டால்தான் தேர்தல் அறிவிப்பு - மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 14 Feb 2020 4:00 AM IST (Updated: 14 Feb 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்புதான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதியை அறிவிக்க முடியும் என மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் அளித்தது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறி இருந்ததாவது:-

மதுரை,

தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகள் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காலியாக உள்ளன. தொடர்ந்து தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்தில் தான் தமிழக அரசு உள்ளது.

நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே. பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டிட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பொறுப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்தபோது, உரிய பதில் அளிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக தேர்தல் ஆணையத்தின் வக்கீல் ஆஜராகி, “திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வரை வெளியிடவில்லை. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிட்டால்தான் தேர்தல் தேதி அறிவிக்க முடியும்” என்றார்.

ஆனால் “தொடர்ந்து இது போன்ற காரணங்களைக்கூறி, தேர்தலை தள்ளிப்போடுகிறார்கள்” என மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை முடிவில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது எப்போது? என்பது குறித்து பதில் அளிக்க 3 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story