தூத்துக்குடியில் பெண்கள், குழந்தைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு


தூத்துக்குடியில் பெண்கள், குழந்தைகளுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்: போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 11:15 PM GMT (Updated: 13 Feb 2020 7:38 PM GMT)

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நடந்த, குழந்தைகள், பெண்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் நடந்தது.

இதில் மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் மற்றும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், பாதிக்கப்பட்டோர் நஷ்டஈடு திட்டம் 2013, பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்டஈடு திட்டம் 2018, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நஷ்டஈடு திட்டம் மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர் திட்டம் ஆகியவை குறித்து பயிற்சி வகுப்புகள் எடுத்தார்.

மேலும் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் நஷ்டஈடு தொகை பெற நீதிமன்றம் மூலமாகவும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாகவும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும், குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதிமன்றம் மூலம் நஷ்டஈடு பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக 10 பெண் வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது குறித்தும் அதன் மூலம் விரைந்து நஷ்டஈடு பெறுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story