இன்று காதலர் தினம்: ரோஜாப்பூ கட்டுகள் ரூ.250 வரை விற்பனை
இன்று காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் ரோஜாப்பூ கட்டுகள் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
காதலர் தினத்தையொட்டி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகளவில் ரோஜாப்பூக்கள் விற்பனைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு நிறங்களிலும் ரோஜாப்பூக்கள் உள்ளன. ஒரு கட்டு ரோஜாப்பூ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் கடந்த ஆண்டை காட்டிலும் எதிர்பார்த்தப்படி வியாபாரம் நடக்கவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு காமராஜர் புஷ்ப வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறியதாவது:-
ரூ.250 வரை விற்பனை
கடந்த ஆண்டு காதலர் தினத்தையொட்டி ஒரு பஞ்ச் ரோஸ் (20 பூக்கள் கொண்ட கட்டு) ரூ.400 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது ரூ.200 முதல் ரூ.250 வரையே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல தாஜ்மகால் எனப்படும் சிவப்பு நிற ரோஜா (20 பூக்கள் கொண்ட கட்டு) ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு (பிங்க்), வெள்ளை நிற ரோஜாப்பூக்களும் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனாலும் எதிர்பார்த்த வியாபாரம் நடக்கவில்லை. முகூர்த்த நாட்கள் அதிகம் உள்ள மாதம் என்பதால் மல்லி, முல்லை, சாதிமல்லி உள்ளிட்ட பூக்கள் வியாபாரம் ஓரளவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது மல்லி (கிலோவில்) ரூ.600-க்கும், சாதிமல்லி ரூ.400-க்கும், முல்லை ரூ.400-க்கும் விற்பனையாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story