விவசாய பிரதிநிதிகளுடன் எடியூரப்பா பட்ஜெட் குறித்து ஆலோசனை பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை
பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதையொட்டி அவர் துறை வாரியாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு அமைப்பின் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை கேட்டு வருகிறார். இந்த நிலையில் கர்நாடக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் எடியூரப்பா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்பட்டதால் பயிர்கள் முழுவதுமாக நாசம் அடைந்துவிட்டன. மாநில அரசு நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்துவதில் தோல்வி அடைந்துவிட்டது. அதனால் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நிவாரணம் வழங்கவில்லை
சில விவசாயிகளுக்கு பழைய கடன் நிலுவையில் உள்ளதால், வங்கிகள் புதிதாக கடன் வழங்க மறுக்கின்றன. பழைய கடன் நிலுவையில் இருந்தாலும் புதிதாக கடன் வழங்க வங்கிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். வெள்ளத்தால் சேதமான பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை.
சில இடங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகைக்கான காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம். இதை முதல்-மந்திரி சரிசெய்ய வேண்டும். வறட்சி ஏற்பட்டுள்ளதால் ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஆன்லைன் வணிகத்தை வேளாண்மை சந்தைகளில் அறிமுகம் செய்ய வேண்டும்.
குடிநீர் விநியோகம்
வட கர்நாடகத்தில் பெலகாவி, தார்வார், கதக் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தை அமல்படுத்த கோவா அரசு அடிக்கடி எதிர்ப்பு தெரிவிக்கிறது.
கோர்ட்டில் வழக்கை சிறப்பான முறையில் நடத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெற வேண்டும். வறட்சியில் சிக்கியுள்ள கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் செய்யும் எத்தினஒலே திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு கோடிஹள்ளி சந்திரசேகர் பேசினார்.
விஞ்ஞான ரீதியில் விலை நிர்ணயம்
அதன்பின்னர் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் பேசும்போது, “விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளும்போது மரணம் ஏற்பட்டால் அத்தகைய விவசாயியின் குடும்பத்திற்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு விஞ்ஞான ரீதியில் விலை நிர்ணயிக்க வேண்டும். விளைபொருட்களை வாங்க அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story