ஒன்றிய நிர்வாகத்தில், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு - உறுப்பினர் ஆவேசம்


ஒன்றிய நிர்வாகத்தில், பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தலையீடு - உறுப்பினர் ஆவேசம்
x
தினத்தந்தி 14 Feb 2020 4:00 AM IST (Updated: 14 Feb 2020 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றிய நிர்வாகத்தில் பெண் கவுன்சிலர்களின், கணவர்கள் தலையீடு அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் ஆவேசமாக பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கமுதி,

கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலின் முதல் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையிலும், ஆணையாளர்கள் ரவி, ராஜேந்திரன் முன்னிலையிலும் நடந்தது. துணை தலைவர் சித்ராதேவி வரவேற்றார்.

தலைவர் தமிழ்செல்வி:- கவுன்சிலர்கள் கட்சி பாகுபாடின்றி, தங்களது பகுதி குறைகள், கோரிக்கைகளை முன்வைத்தால், கட்சி பேதமின்றி, நிவர்த்தி செய்யப்படும்,

முத்துலட்சுமி:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி, உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலில் 60 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஆகவே பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் ஆதிக்கம் செலுத்துவதை, அதிகாரிகள் தட்டிக் கேட்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொண்டால் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவி(ஆணையாளர்):- கவுன்சிலுக்குட்பட்ட குறைகள், கோரிக்கைகளை மட்டுமே இங்கு கூறவேண்டும்.

சசிக்குமார் (மாவட்ட கவுன்சிலர்):- ஆளும் அ.தி.மு.க., அரசை புகழ்பாட இந்த கூட்டம் நடத்தவில்லை, கவுன்சிலர்களின் கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தவேண்டும்.

முத்துபாண்டியம்மாள்:- ஆளும் அ.தி.மு.க.வில் கவுன்சிலராக இருக்கும் கவுன்சிலர்கள், பெண்களுக்கு ஆதரவாக பேசுவதில் என்ன குறையுள்ளது. இதை ஏன் தடுக்கிறீர்கள். பெண் கவுன்சிலர்கள் சுயமாக செயல்படுவதை ஆதரிக்கவேண்டும். பினாமிகள் நிர்வாகத்தில் தலையிட்டால், கட்டாயம் நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம்.

அன்பரசு:- தி.மு.க.வை சேர்ந்தவர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பதால், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலுக்குட்பட்ட பகுதிகளில் திட்ட பணிகள் முடக்கம் செய்வதாக வதந்திகள் ஏற்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமன்றி திட்டபணிகளை செயல்படுத்த வேண்டும்.

வாசுதேவன் (மாவட்ட கவுன்சிலர்):- அனைத்து பகுதிகளுக்கும், மக்களுக்கு தேவையான திட்ட பணிகளை அமல்படுத்தி, பாரபட்சமின்றி செயல்படுத்தப்படும். கட்சி பேதமின்றி, மக்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கனகஅரசி:- அபிராமம் அருகே பள்ளபச்சேரியில் ஊருணி நடுவே பல ஆண்டுகளாக கீழே சாய்ந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும். ரோடு அமைக்கும் பணிக்காக பல நாட்களாக துண்டிக்கபட்ட குடிநீர் இணைப்பை சீரமைக்கவேண்டும். முத்தாதிபுரம் அரசு தொடக்கப்பள்ளி அருகே இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை அகற்றவேண்டும். உடையநாதபுரத்தில் சொந்த கட்டத்தில் ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முடிவில் ஒன்றிய பொறியாளர் வீரசேகர் நன்றி கூறினார்.

Next Story