மக்கள் தொடர்பு முகாமில் 163 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் வழங்கினார்
இளையான்குடி அருகே சாலைகிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 163 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே சாலைகிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
தமிழக அரசு, மக்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி தற்போது மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. கிராமப்பகுதிகளில் பொதுமக்களின் தேவையை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றுவதே அரசின் நோக்கமாகும். முகாமில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் மனுவிற்கு 7 தினங்களுக்குள் தீர்வு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமத்திலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து சுயஉதவிக்குழுக்கள் அமைத்து தொழில் பயிற்சி பெற்று பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இறப்பு நிவாரணத் தொகை, திருமண உதவித்தொகையும், இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் 20 பேருக்கு வீட்டுமனை பட்டா மாறுதல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.85 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரணம் உதவித்தொகை 5 பேருக்கும், மாவட்ட மகளிர் திட்டத்துறையின் மூலம் 91 பேருக்கு ரூ.1 கோடியே 2 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம், வங்கிக் கடன் வழங்கப்பட்டது.
மேலும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன், சிறு வணிக கடன், வேளாண்மைத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.56 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து தானியங்கள், நுண்ணீர் பாசனம், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 581 மதிப்பீட்டில் மழைத்தூவுவான், சுகாதாரத்துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களும் என மொத்தம் 163 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வ குமாரி, மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்தன், இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தனலெட்சுமி, இளையான்குடி வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பர்ணபாஸ், சாலை கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story