பெங்களூருவில் ஆட்டோக்கள் குறைந்த எண்ணிக்கையில் ஓடின கர்நாடகத்தில் முழு அடைப்பால் பாதிப்பு இல்லை அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின
கர்நாடகத்தில் நேற்று நடந்த முழு அடைப்பால் பாதிப்பு இல்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பெங்களூருவில் ஆட்டோக்கள் குறைந்த எண்ணிக்கையில் ஓடின.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சரோஜினி மகிஷி அறிக்கை கடந்த 1986-ம் ஆண்டு அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கர்நாடகத்தில் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்பட 57 பரிந்துரைகள் செய்யப்பட்டன.
34 ஆண்டுகள் ஆகியும், தனியார் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அந்த பரிந்துரை இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பல்வேறு கன்னட சங்கங்கள் இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வரவேற்பு கிடைக்கவில்லை
இந்த நிலையில் தனியார் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எச்.பி.நாகேஷ், 13-ந் தேதி (அதாவது நேற்று) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி கர்நாடகத்தில் நேற்று அந்த சங்கங்கள் முழு அடைப்பில் ஈடுபட்டன.
ஆனால் இந்த முழு அடைப்புக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. போராட்டம் பிசுப்பிசுத்து காணப்பட்டது. ஏனென்றால் பெங்களூருவில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின. வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களின் எண்ணிக்கை மிக குறைவாக காணப்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தன. கடைகள், வணிக வளாகங்கள் எப்போதும் போல் திறந்திருந்தன. திரையரங்குகளில் திரைப்பட காட்சிகள் திரையிடப்பட்டன.
வாகன நெரிசல் குறைவு
காய்கறி மார்க்கெட்டுகளில் வியாபாரம் எப்போதும் போல் இருந்தது. மெட்ரோ ரெயில் சேவையில் எந்த பாதிப்பும் உண்டாகவில்லை. பெங்களூரு சாலைகளில் நேற்று வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழியும் நிலை நேற்று தென்படவில்லை. மிகவும் பரபரப்பான சாலைகளில் கூட வாகனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவாக இருந்தது. இதனால் சாலைகளில் வாகன நெரிசல் குறைவாக இருந்தது. கன்னட சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.
எலக்ட்ரானிக் சிட்டி அருகே பெங்களூரு-ஓசூர் சாலையில் டயர்களை போட்டு தீயிட்டு எரித்து தங்களின் ஆக்ரோஷத்தை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முழு அடைப்பையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பஸ்கள் கர்நாடகத்திற்குள் இயக்கப்படவில்லை. பெங்களூருவுக்கு வரும் பஸ்கள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன.
ஆதரவு வழங்கவில்லை
முழுஅடைப்பு போராட்டம் நடந்த போதிலும், தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. எந்த நிறுவனமும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை. இதனால் பெங்களூருவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெங்களூருவில் முக்கியமான சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதனால் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
அதே போல் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு வரவேற்பு இல்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அரசு பஸ்களின் சேவை வழக்கம்போல் இருந்தது. கன்னட அமைப்பினர் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த முழு அடைப்புக்கு முக்கியமான கன்னட போராட்டக்காரர்களான வாட்டாள் நாகராஜ், நாராயணகவுடா உள்ளிட்டோர் ஆதரவு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story