குடும்பத்தினருக்கு அரசு ஒப்பந்த பணி: உள்துறை மந்திரியை நேரில் சந்தித்து மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்
குடும்பத்தினருக்கு அரசு ஒப்பந்த பணி வழங்கப்பட்டது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே, உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
மும்பை,
மும்பை போலீஸ் கமிஷனராக இருப்பவர் சஞ்சய் பார்வே. இவரது மகன் சுமுக் பார்வே, மனைவி ஷர்மிளா பார்வே ஆகியோர் கிரிஸ்ப்க்யு என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு முந்தைய பா.ஜனதா அரசு, கமிஷனர் அலுவலக ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலை தொடர்பான ஒப்பந்தத்தை வழங்கியது.
போலீஸ் அதிகாரியின் குடும்ப நிறுவனத்துக்கு அரசு பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே கூறியதாவது:-
லாபம் ஏற்படுத்தி...
எனது குடும்பத்தினர் நிறுவனம் போலீஸ் ஆவணங்களை இலவசமாக டிஜிட்டல் மயமாக்கி தர முன்வந்தது. எனவே போலீஸ் துறைக்கு லாபம் ஏற்படுத்தி கொடுக்கத்தான் அந்த பணி ஒப்பந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பணியை அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தால் அந்த நிறுவனத்தினர் எந்த பணப்பலனும் அடையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சையில் சிக்கி உள்ள மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே வருகிற 29-ந்தேதியுடன் பணி ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை மந்திரியிடம் விளக்கம்
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வேயை மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் அழைத்து பேசினாா். அப்போது, அவர் ஒப்பந்தம் தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.
இது குறித்து மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், ‘‘மும்பை போலீஸ் கமிஷனரின் குடும்பத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பாக அவரை அழைத்து விளக்கம் கேட்டேன். மேலும் அவரிடம் ஒப்பந்தம் குறித்த விவரங்களை கேட்டு உள்ளேன்’’ என்றார்.
முன்னதாக மந்திரி அனில் தேஷ்முக் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார்.
Related Tags :
Next Story