அந்தேரியில் வணிக கட்டிடத்தில் பயங்கர தீ பொருட்கள் எரிந்து நாசம்
அந்தேரியில் வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
மும்பை,
மும்பை அந்தேரி, மரோல் பகுதியில் ரோல்டா டெக்னாலஜி பார்க் வளாகத்தில் 3 மாடிகள் கொண்ட கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட வணிக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சமீப நாட்களாக மூடப்பட்டு கிடக்கிறது.
இந்தநிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் திடீரென அந்த அலுவலகத்தின் 2-வது மாடியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 12 வாகனங்கள் மற்றும் 10 தண்ணீர் டேங்கர் லாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ராட்சத ஏணிகொண்ட வாகனம் அங்கு கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. இதற்கிடையே தீ மள மளவென 3-வது மாடிக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
உயிர்சேதம் தவிர்ப்பு
இதனால் அங்கிருந்த கம்ப்யூட்டர், மின்னனு சாதனங்கள் தீயில் எரிந்து கரும்புகை உண்டானது. தீயணைப்பு வீரர்கள் அலுவலகத்தின் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர். பின்னர் கண்ணாடியின் இடைவெளி வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5½ மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர். பின்னர் கட்டிடத்தை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சர்வர் அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கட்டிடத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story