காருக்கு தீவைத்த ஆசாமிகளை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


காருக்கு தீவைத்த ஆசாமிகளை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2020 11:00 PM GMT (Updated: 13 Feb 2020 11:57 PM GMT)

திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகியின் காருக்கு தீவைத்த ஆசாமிகளை கைது செய்யக்கோரி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தில் இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் மோகனசுந்தரம் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த அவருடைய காரை மர்ம ஆசாமிகள் நேற்றுமுன்தினம் அதிகாலையில் தீ வைத்து விட்டு தப்பினார்கள். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகள் 4 பேரை வடக்கு போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், காவல்துறையை கண்டித்தும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசும்போது “கார் எரிப்பு சம்பவத்தில் மர்ம ஆசாமிகள் ரசாயன கலவையை பயன்படுத்தி உள்ளனர்.இதில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாவிட்டால் திருப்பூரை காக்க கடையடைப்பு மற்றும் மக்களை திரட்டி பேரணி நடத்தப்படும்'' என்றார்.

இதில் மாநில செயலாளர்கள் கிஷோர்குமார், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story