லோயர்கேம்ப் காலனியில், சாக்கடை கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி


லோயர்கேம்ப் காலனியில், சாக்கடை கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 14 Feb 2020 4:00 AM IST (Updated: 14 Feb 2020 5:27 AM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப் காலனியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் குட்டைபோல் தேங்குவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 21-வது வார்டு பகுதியான லோயர்கேம்ப் காலனியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த காலனி பகுதி தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பெரும்பாலான வீடுகள் சாலையை ஒட்டியபடி அமைந்துள்ளன. ஆனால் அந்த வீடுகள் அனைத்தும் சாலையை காட்டிலும் மிகவும் தாழ்வாக அமைந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக செல்ல சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரும், கழிவுநீரும் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் மற்றும் கழீவுநீர் செல்லும் வகையில் கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், லோயர்கேம்ப் அரசுப்பள்ளி அருகே இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றது.

ஆனால் கால்வாய் பணிக்காக மின் கம்பங்களை மாற்றி அமைக்க மின்வாரிய துறையினர் முன்வரவில்லை. இதனால் மின் கம்பங்கள் உள்ள பகுதியில் கால்வாய் அமைக்காமல் நெடுஞ்சாலைத்துறையினர் இடைவெளி விட்டுவிட்டனர். தற்போது கால்வாய் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் முழுமையாக கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் அரிப்பு ஏற்பட்டு மின் கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. ஒருபுறம் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு, மறுபுறம் மின்கம்பம் விழும் அபாயம் என பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லோயர்கேம்ப் காலனி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story