சிறுமுகை அருகே மீண்டும் அட்டகாசம்: தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தைப்புலி - பொதுமக்கள் பீதி
சிறுமுகை அருகே தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை சிறுத்தைப்புலி அடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, மதுக்கரை, போளூவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியையொட்டி தோட்டங்களில் புகுந்து சிறுத்தைப்புலி ஒன்று கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 9-ந் தேதி முருகன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தைப்புலி அங்கிருந்த கன்று குட்டியை அடித்து கொன்றது.
இந்த நிலையில் சிறுமுகை-சக்தி ரோட்டில் கோவில்மேடு கரடு பகுதியையொட்டி விவசாயி சரவணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சரவணன் நேற்று முன்தினம் இரவு ஆடுகளை வழக்கம்போல் வீட்டின் முன்பு கட்டிவிட்டு தூங்க சென்றார்.
இரவு 9 மணிக்கு திடீரென ஆட்டின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தைப்புலி ஆட்டை அடித்து கொன்று அதன் இறைச்சியை சாப்பிட முயற்சித்துக் கொண்டிருந்தது. இதனைக்கண்ட அவர்கள் சத்தம் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு பக்கத்து தோட்டங்களில் உள்ளவர்களும் அங்கு வந்தனர். இதையடுத்து சிறுத்தைப்புலி ஆட்டை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதியை நோக்கி ஓடி மறைந்தது.
இந்த சம்பவம் குறித்து விவசாயி சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த சிறுமுகை வனச்சரகர் மனோகரன், வனவர் சத்யராஜ் மற்றும் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைப்புலி அடித்துக்கொன்ற ஆட்டை பார்வையிட்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் அங்கு ஆட்டை அடித்துக்கொன்றது சிறுத்தைப்புலிதான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். சிறுத்தைப்புலி மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து ஆட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சிறுமுகை அருகே உள்ள சிட்டேபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் தோட்டத்திற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி புகுந்து அங்கு கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை அடித்து கொன்றது. தற்போது மீண்டும் விவசாயி சரவணன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து ஆட்டை அடித்து கொன்றுள்ளது. சிறுத்தைப்புலியின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும் இரவு நேரங்களில், பொதுமக்கள் வெளியே வர மிகவும் அச்சப்படுகின்றனர். இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ளோம். மேலும் தோட்டத்திற்கு செல்லவும் அச்சமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிட்டேபாளையம் கிராம பகுதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டு வைக்கும் இடத்தை வனத்துறையினர் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் சிறுத்தைப் புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story