சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அரசியல் கட்சிகள் வரவேற்பு


சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அரசியல் கட்சிகள் வரவேற்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 6:14 AM IST (Updated: 14 Feb 2020 6:14 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளது.

புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசின் தேச விரோத குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்களை புதுவை சிறப்பு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

இந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்து இருக்கிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல் ரஹீம் காரைக்காலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி அரசின் சிறப்பு சட்டசபை கூட்டத்தில், மத்திய அரசின் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசுக்கு மாநில சிறுபான்மை மக்கள் மற்றும் த.மு.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

சட்டசபை கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியது மக்களை புறக்கணித்ததற்கு சமம். காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சிறுபான்மையினத்தை சேர்ந்தவர். ஆனால் அவரும் சட்டசபையை புறக்கணித்திருப்பது காரைக்கால் சிறுபான்மையின மக்களை புறக்கணித்ததற்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்ட செயலாளர் சதாம் நிவாஷ் ஷரிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி சிறப்பு சட்டசபை கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வரவேற்கிறது. மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நல்லாட்சி புரியும் முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு மதத்தை முன்நிறுத்தும் வகையில் மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. இந்த நிலையில் புதுச்சேரி அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதை வரவேற்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story