கிருமாம்பாக்கம் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் மோதி டிப்பர் லாரி கவிழ்ந்தது


கிருமாம்பாக்கம் அருகே சாலையின் தடுப்புச்சுவரில் மோதி டிப்பர் லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 14 Feb 2020 12:47 AM GMT (Updated: 14 Feb 2020 12:47 AM GMT)

கிருமாம்பாக்கம் அருகே சாலையின் நடுவே தடுப்புச்சுவரில் மோதி டிப்பர் லாரி கவிழ்ந்தது.

பாகூர்,

சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 40). டிப்பர் லாரி டிரைவர். இவர் திருவக்கரையில் இருந்து டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு கடலூருக்கு புறப்பட்டு வந்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் லாரியின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்றது. டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஆறாக ஓடியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் முரளி காயமின்றி தப்பினார்.

இந்த விபத்தால் புதுச்சேரி- கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் உதவியுடன் டிப்பர் லாரியை சாலையில் இருந்து அகற்றினர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

புதுச்சேரி - கடலூர் சாலையில் கன்னியக்கோவில், பிள்ளையார்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் சுமார் 200 மீட்டருக்கு சாலையின் நடுவே தடுப்பு சுவர் விட்டு விட்டு கட்டப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு இந்த தடுப்பு சுவர் இருப்பதை எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள், எச்சரிக்கை பலகைகள் இல்லை. இதனால் தொடர்ந்து விபத்துகள் நடக்கிறது.

இதை தடுக்க சாலையின் நடுவே இடைவிடாது தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும், மேலும் தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரித்து, அதில் பிரதிபலிப்பான் (ரிப்ளைக்டர்) பொருத்தவேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story