என்னை விலை கொடுத்து வாங்க முயற்சி: பதவியில் இருந்து நீக்கினாலும் மக்கள் பணி தொடரும் தனவேலு எம்.எல்.ஏ. ஆவேசம்


என்னை விலை கொடுத்து வாங்க முயற்சி: பதவியில் இருந்து நீக்கினாலும் மக்கள் பணி தொடரும் தனவேலு எம்.எல்.ஏ. ஆவேசம்
x
தினத்தந்தி 14 Feb 2020 12:57 AM GMT (Updated: 14 Feb 2020 12:57 AM GMT)

என்னை பதவியில் இருந்து நீக்கினாலும் எனது மக்கள் பணி தொடரும். என்னை விலை கொடுத்து வாங்க முயற்சிப்பவர்களின் ஜம்பம் பலிக்காது என்று தனவேலு எம்.எல்.ஏ. ஆவேசமாக கூறினார்.

பாகூர்,

குடிசை மாற்று வாரியம் சார்பில், பாகூர் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றாவது தவணை தொகை வழங்கும் நிகழ்ச்சி, பாகூரில் உள்ள கமலா நேரு திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

இதில், தனவேலு எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பாகூர் தொகுதியை சேர்ந்த 40 பயனாளிகளுக்கு தவணை தொகை ஆணையினை வழங்கி பேசியதாவது;-

‘‘ மக்களின் மீது அக்கரை கொண்ட தலைவர்கள் இருந்து வந்த நிலையில், தற்போதுள்ள முதல் -அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் அரசின் சொத்துக்களை தனது சொத்துக்களாக மாற்றி வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழல்கள் குறித்து அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள் துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்.

அது தொடர்பாக, எனக்கு மத்திய உள் துறை அமைச்சகத்திடம் இருந்து பதிவு தபாலில் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், உங்களின் புகார் மனு கிடைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

நான் எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு லாயக்கு இல்லை என இப்போதுள்ள முதல்-அமைச்சர், மற்றும் அமைச்சர்களும் கூறுகின்றனர். இல்லையென்றால், நாங்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு அமைதியாக இருந்து விடு என்கின்றனர். என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது.

என்னுடைய பதவியை பறிப்பதற்காக எனக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை (இன்று) வக்கீல் மூலமாக பதில் நோட்டீஸ் கொடுக்க உள்ளேன். அப்படி கொடுத்தாலும் என்னை நீக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது. நான் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், என்னுடைய மக்கள் பணி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story