காதலர் தினத்தையொட்டி நடந்த எருது விடும் திருவிழா
மேல்வல்லம் கிராமத்தில் காதலர் தினத்தையொட்டி நடந்த எருது விடும் திருவிழாவை காண பார்வையாளர்கள் திரண்டனர்
அடுக்கம்பாறை,
வேலூர் மாவட்டத்தில் கோவில் திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் காளை விடும் திருவிழா நடந்து வருகிறது. இந்த நிலையில் கணியம்பாடியை அடுத்த மேல்வல்லம் கிராமத்தில் காதலர் தினத்தையொட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் இருந்து 199 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அந்த எருதுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அனுமதி வழங்கப்பட்டபின் அவை களத்தில் இறங்க தயாராக நின்றன. காளை ஓடும் வீதியின் இருபுறமும் பார்வையாளர்கள் பார்க்க வசதியாக தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதனை தொடர்ந்து நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா தலைமை தாங்கினார். வேலூர் தாசில்தார் சரவணமுத்து, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல துணை தாசில்தார் விநாயக மூர்த்தி, கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சேட்டு வரவேற்றார்.
காலை 10 மணிக்கு முதல் எருது அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து எருதுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டபோது அவை இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. பார்வையாளர்கள் அந்த காளைகள் வேகமாக ஓடுவதற்காக ஆரவாரம் செய்தனர். மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
இதனையொட்டி 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் இருந்தன. மதியம் 2 மணி வரை நடந்த இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story