40 ராணுவ வீரர்கள் பலியான நினைவுதினம்: அஞ்சலி நிகழ்ச்சியில் கலெக்டர்– போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி


40 ராணுவ வீரர்கள் பலியான நினைவுதினம்: அஞ்சலி நிகழ்ச்சியில் கலெக்டர்– போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 1:47 PM GMT)

புல்வாமாவில் 40 ராணுவ வீரர்கள் பலியான நினைவு தின இருசக்கர வாகன பேரணி நேற்று களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரி வரை நடந்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ‘கன்னியாகுமரி ஜவான்ஸ்‘ என்ற ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் நேற்று களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடந்தது.

களியக்காவிளையில் நடந்த இந்த பேரணியின் தொடக்க நிகழ்ச்சியில் குரூப் கேப்டன் எட்வர்டு, வீரமரணம் அடைந்த வீரர்களின் உருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்தி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் சுமார் 100–க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் ஹெல்மெட் அணிந்தவாறு பேரணியாக சென்ற அவர்கள் மார்த்தாண்டம், அழகியமண்டபம், தக்கலை வழியாக நாகர்கோவில் வந்தனர். வழியில் பல்வேறு இடங்களில் கல்லூரி என்.சி.சி. மாணவ– மாணவிகள் அவர்களை வரவேற்று, அந்தந்த பகுதியில் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவவீரர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியையும் நடத்தினர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே இதேபோல் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கன்னியாகுமரி ஜவான்ஸ் என்ற அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அங்கு தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான 40 வீரர்களின் உருவப்படங்கள் தாங்கிய பேனர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அந்த படங்களுக்கு குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பலியான ராணுவ வீரர்கள் நினைவாக உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, இந்து கல்லூரி என்.சி.சி. மாணவ– மாணவிகள், ராணுவ அதிகாரிகள், பேரணியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு பேரணியாகச் சென்றனர்.

இதேபோல் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு பொதுமக்கள் சார்பிலும், மாணவ– மாணவிகள், இளைஞர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள் சார்பிலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாகர்கோவில் டி.வி.டி. காலனி சந்திப்பு பகுதியில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அவர்கள் பலியான ராணுவவீரர்கள் 40 பேரின் உருவப்படம் அடங்கிய பிரமாண்டமான பேனர் சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த படங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் வேலாயுதம், மகேஷ், ராஜேஸ்வரன், சபரி, வைகுண்டபெருமாள், அஜித் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினர்.

Next Story