டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா பந்தல் அமைக்க கால்கோள் நாட்டப்பட்டது


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா பந்தல் அமைக்க கால்கோள் நாட்டப்பட்டது
x
தினத்தந்தி 14 Feb 2020 10:45 PM GMT (Updated: 14 Feb 2020 3:12 PM GMT)

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா வருகிற 22–ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா வருகிற 22–ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பந்தல் அமைப்பதற்கான கால்கோள் நாட்டப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் 60 சென்ட் நிலத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. மணிமண்டப வளாகத்தில் பூங்கா, நூலகம் மற்றும் மணிமண்டபத்துக்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா வருகிற 22–ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வெண்கல திருவுருவ சிலையை திறந்து வைத்து, மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

நலத்திட்ட உதவிகள் 

தொடர்ந்து மணிமண்டபம் அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான பயனாளிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் அவர், பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட பல்வேறு புதிய திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கியும் வைக்கிறார்.

கால்கோள் நாட்டு விழா 

இதனை முன்னிட்டு, விழா நடைபெறவுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பந்தல் அமைப்பதற்கான கால்கோள் நாட்டு விழா நேற்று நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா தலைமை தாங்கி, பந்தல் அமைப்பதற்கான கால்கோளை நாட்டி தொடங்கி வைத்தார்.

விழாவில் திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ், யூனியன் ஆணையாளர் சந்தோஷ், மண்டல துணை தாசில்தார் கோபால், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story