நெல்லையில் காதலர் தினத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்


நெல்லையில் காதலர் தினத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:15 PM GMT (Updated: 14 Feb 2020 3:57 PM GMT)

நெல்லையில் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நெல்லை, 

நெல்லையில் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

காதலர் தினம் 

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்துக்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றன. இந்தநிலையில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அணி, இந்திய வாலிபர் சங்கம் ஆகியவைகள் சார்பில் மேலப்பாளையம் சந்தை அருகே காதலர் தினத்தை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பின்னர் பலூன் மற்றும் புறாக்கள் பறக்க விடப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் வரகுணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் கருணா, நிர்வாகிகள் சுரேஷ், பீட்டர், மகேஷ், மோசஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு 

இந்து மக்கள் கட்சி சார்பில் முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முறையான காதலை வரவேற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் நூதன முறையில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்துக்கு வரும் உண்மையான காதலர்களுக்கு களிமண்ணால் செய்யப்பட்ட மண் சட்டி, மண் சம்பந்தப்பட்ட பொருட்களை வழங்க இருந்தனர்.

மேலும் அவர்களுக்கு மாலை மற்றும் தாலி வழங்க காத்து கொண்டு இருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். கட்சி நிர்வாகிகள் காந்திமதி, முருகானந்தம், சீனிவாசன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். காதலர் தினத்தையொட்டி மாவட்ட அறிவியல் மையத்தில் பாதுகாப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சேரன்மாதேவியை அடுத்த பத்தமடை அருகே உள்ள மணிமுத்தான்குளம் கிராமத்தில் இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 2 நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story