வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் 3 மாவட்டங்களில் 31 லட்சத்து 89 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார். இதில் 31 லட்சத்து 89 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வேலூர்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. இந்த சிறப்பு சுருக்க திருத்த முகாமில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் 15 லட்சத்து 32 ஆயிரத்து 885 ஆண்கள், 15 லட்சத்து 94 ஆயிரத்து 921 பெண்கள், 180 மூன்றாம் பாலினத்தவர்கள் என 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து 1,700 மையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக மொத்தம் 96 ஆயிரத்து 152 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த விண்ணப்பங்களில் பெயர் சேர்த்தலுக்கு 64 ஆயிரத்து 454 விண்ணப்பங்களும், நீக்கலுக்கு 3 ஆயிரத்து 423 விண்ணப்பங்களும் திருத்தம் செய்வதற்கு 11 ஆயிரத்து 964 விண்ணப்பங்களும், முகவரி மாற்றத்துக்கு 5,413 விண்ணப்பங்களும் என மொத்தம் 85 ஆயிரத்து 254 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சியினர் முனனிலையில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார்.
இதன்படி வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 39 ஆயிரத்து 453 வாக்காளர்கள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 லட்சத்து 5 ஆயிரத்து 280 வாக்காளர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 284 வாக்காளர்கள் என மொத்தம் 31 லட்சத்து 89 ஆயிரத்து 17 வாக்களர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்களை பெண்வாக்காளர்கள் 68,215 பேர் அதிகம் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் 1,669 வாக்குச்சாவடி மையங்களில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என பார்வையிடலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story