டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி 2 பேர் படுகாயம்


டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து:   ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி   2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:30 AM IST (Updated: 14 Feb 2020 11:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழக-ஆந்திர எல்லையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை,

ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர் யஷ்வந்த் (வயது 35). இவர், நேற்று அதிகாலை தனது பெற்றோரை அமெரிக்கா நாட்டிற்கு வழியனுப்புவதற்காக சென்னை விமான நிலையம் சென்று விட்டு, தனது குடும்பத்தோடு காரில் ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை யஷ்வந்த்தே ஓட்டிச்சென்றார்.

அந்த காரில் யஷ்வந்தின் மனைவி அனுசெல்வி (27), அவர்களது மகன் ரீயான் செரி (1), யஷ்வந்த்தின் சகோதரி விஜயலட்சுமி (37) விஜயலட்சுமியின் மகள்களான நமீதா(14), ரீத்திகா (12) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பனங்காடு என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதே திசையில் ஆந்திரா நோக்கி சென்ற பால் டேங்கர் லாரி ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. யஷ்வந்த் ஓட்டிச் சென்ற கார், திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக பால் டேங்கர் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.

4 பேர் பலி

மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் யஷ்வந்த்தின் மனைவி அனுசெல்வி, மகன் ரியான் செரி, யஷ்வந்த்தின் சகோதரி விஜயலட்சுமி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த யஷ்வந்த், சிறுமிகளான நமீதா, ரீத்திகா ஆகிய 3 பேரும் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அதில் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நமீதா சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யஷ்வந்த், ரீத்திகா ஆகிய 2 பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

போக்குவரத்து பாதிப்பு

காரை ஓட்டிச்சென்ற யஷ்வந்த் சீட் பெல்ட் அணிந்து இருந்ததாலும், காரின் முன்பக்கத்தில் இருந்த பாதுகாப்பு பலூன் உடனடியாக விரிந்ததாலும் அவர் படுகாயத்துடன் உயிர் பிழைத்ததாக தெரிகிறது.

இந்த விபத்து காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரரெட்டி தலைமையில் தடா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story